Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
புன்மை நினைந் திரங்கல்
puṉmai niṉain tiraṅkal
ஆற்றா விரக்கம்
āṟṟā virakkam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai
021. திருவடி சூட விழைதல்
tiruvaṭi sūṭa viḻaital
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
1.
தேனார் அலங்கல் குழல்மடவார் திறத்தின் மயங்காத் திறல்அடைதற்
கானார் கொடிஎம் பெருமான்தன் அருட்கண் மணியே அற்புதமே
கானார் பொழில்சூழ் திருத்தணிகைக் கரும்பே கருணைப் பெருங்கடலே
வானார் அமுதே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
2.
தாழும் கொடிய மடவியர்தம் சழக்கால் உழலாத் தகைஅடைந்தே
ஆழும் பரமா னந்தவெள்ளத் தழுந்திக் களிக்கும் படிவாய்ப்ப
ஊழ்உந் தியசீர் அன்பர்மனத் தொளிரும் சுடரே உயர்தணிகை
வாழும் பொருளே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
3.
மின்னுண் மருங்குல் பேதையர்தம் வெளிற்று மயக்குள் மேவாமே
உன்னும் பரம யோகியர்தம் உடனே மருவி உனைப்புகழ்வான்
பின்னும் சடைஎம் பெருமாற்கோர் பேறே தணிகைப் பிறங்கலின்மேல்
மன்னும் சுடரே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
4.
ஆறாத் துயரம் தருங்கொடியார்க் காளாய் உழன்றிங் கலையாதே
கூறாப் பெருமை நின்அடியார் கூட்டத் துடன்போய்க் குலாவும்வண்ணம்
தேறாப் பொருளாம் சிவத்தொழுகும் தேனே தணிகைத் திருமலைவாழ்
மாறாச் சுகமே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
5.
விரதம் அழிக்கும் கொடியார்தம் விழியால் மெலியா துனைப்புகழும்
சரதர் அவையில் சென்றுநின்சீர் தனையே வழுத்தும் தகைஅடைவான்
பரதம் மயில்மேல் செயும்தணிகைப் பரனே வெள்ளிப் பருப்பதம்வாழ்
வரதன் மகனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
6.
வெயில்மேல் கீடம் எனமடவார் வெய்ய மயற்கண் வீழாமே.
அயில்மேல் கரங்கொள் நினைப்புகழும் அடியார்சவையின் அடையும்வகைக்
குயில்மேல் குலவும் திருத்தணிகைக் குணப்பொற் குன்றே கொள்கலப
மயில்மேல் மணியே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
7.
தனமும் கடந்தே நாரியர்மால் தனையும் கடந்தே தவம்அழிக்கும்
சினமும் கடந்தே நினைச்சேர்ந்தோர் தெய்வச் சபையில் சேர்ந்திடவே
வனமும் கடமும் திகழ்தணிகை மலையின் மருந்தே வாக்கினொடு
மனமும் கடந்தோய் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
8.
கல்லாக் கொடிய மடவார்தம் காமக் குழிக்கண் வீழாமே
நல்லார்க் கெல்லாம் நல்லவநின் நாமம் துதிக்கும் நலம்பெறவே
சொல்லாற் புனைந்த மாலையொடும் தொழுது தணிகை தனைத்துதிக்க
வல்லார்க் கருளும் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
9.
கள்ளக் கயற்கண் மடவார்தம் காமத் துழலா துனைநினைக்கும்
உள்ளத் தவர்பால் சேர்ந்துமகிழ்ந் துண்மை உணர்ந்தங் குற்றிடுவான்
அள்ளற் பழனத் திருத்தணிகை அரசே ஞான அமுதளீக்கும்
வள்ளற் பெருமான் நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பாயே.
10.
பாகைப் பொருவும் மொழியுடையீர் என்று மடவார்ப் பழிச்சாமல்
ஓகைப் பெறும்நின் திருத்தொண்டர் உடன்சேர்ந் துண்மை யுணர்ந்திடுவான்
தோகைப் பரிமேல் வருந்தெய்வ சூளா மணியே திருத்தணிகை
வாகைப் புயனே நின்திருத்தாள் அடியேன் முடிமேல் வைப்பபாயே.
திருவடி சூட விழைதல் // திருவடி சூட விழைதல்
[5-21, 0262]SDSG12--Theenaar Alangkal.mp3
Download
5-021-0262-Thiruvadi Suuda Vilaithal.mp3
Download